ரம்புக்கனை சம்பவம் : பொலிஸாரின் பலப்பிரயோகம் குறித்து விசாரணை செய்ய குழு !

ரம்புக்கனையில் எதிர்ப்பில் ஈடுபட்ட சிவிலியன்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் சட்ட வரையறைகளுக்கு உட்பட்ட பலப் பிரயோகமா என்பது தொடர்பில் விசாரிக்க மூவர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

சமூக பொலிஸ் இராஜாங்க அமைச்சின் செயலர் எஸ்.ரி. கொடிகார தலைமையில் இந்த குழு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் டயஸினால் அமைக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சின் செயலர் எஸ். ரி. கொடிகார தலைமையிலான இக்குழுவில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலர் எம்.எஸ்.பி. சூரியப்பெரும மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சட்ட ஆலோசகர் மேஜர் ஜெனரால் ஈ.எஸ். ஜயசிங்க ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

இந்த குழுவானது, ரம்புக்கனையில், ஆர்ப்பட்டத்தை கலைக்க பொலிஸார் செய்த பலப் பிரயோகம் சட்ட ரீதியிலானதா என்பது தொடர்பில் ஆராயும் என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்று முன் தினம்(19) ரம்புக்கனையில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகத்தினால் காயமடைந்த 13 பேர் தொடர்ந்தும் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மேலும் மூவரின் நிலை கவவைக்கிடமாக உள்ளதென கேகாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, காயமடைந்த 15 பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.