மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பதில்லை!

“யுத்தங்கள் போன்ற முரட்டு அனுபவங்களை இலக்கியத்தின் மூலமாகச் சொன்னாலும் அது படிக்கிறவனுக்கு ஒரு நம்பிக்கையைத்தான் ஏற்படுத்த வேண்டுமேயொழிய மனச்சோர்வை ஏற்படுத்தி விடக்கூடாது” சொல்லிக் கொண்டு போகிறார் தமிழில் யுத்த அனுபவத்தைத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கும் எழுத்தாளரான ப.சிங்காரம்.

எழுதினது ‘கடலுக்கப்பால்’, ‘புயலில் ஒரு தோணி’ என்கிற இரு நாவல்கள்தான்.

87-ல் வந்த ‘புதுயுகம்’ பத்திரிகை தமிழின் சிறந்த மூன்று நாவல்களில் ஒன்றாகக் குறிப்பிட்டிருப்பது ப.சிங்காரத்தின் ‘புயலில் ஒரு தோணி’ நாவலை. அதன் பிறகே நவீன இலக்கியவாதிகள் சிலரது பார்வையில் இந்த நாவல்கள் பட்டாலும் தமிழில் இதுவரை பலருக்கு நேர்ந்த புறக்கணிப்புதான் இவருக்கும்.

மதுரையில் இரைச்சலும், வாகனப் போக்குவரத்தும் அதிகரித்த மையப்பகுதியில் ஒரு ஹாஸ்டல் அறையில் எழுபத்தியேழு வயதுக்கான தளர்வுடனிருக்கிறார் சிங்காரம்.

திருமணம், குடும்பம் என்கிற உறவுகளுக்குள் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை. யுத்த காலத்திய அனுபவங்களைப் பற்றிப் பேசும்போது மாதம், தேதி முதலியவற்றைக்கூட ஞாபகங்களில் பிசகில்லாமல் பேசுகிறார்.

“செட்டிநாடு ஏரியாவான சிங்கம்புணரிதான் எனக்குச் சொந்த ஊர். அப்போ அந்தப் பகுதியில் பலரும் வியாபாரத்துக்காக மலேயா, பினாங்கு என்று போய்க் கொண்டிருந்த நேரம்.

18 ஆவது வயதில் நானும் இந்தோனேசியாவில் ‘மைதான்’ என்கிற ஊருக்குப் போனேன். லேவாதேவி கடை. அங்கே நான் அசிஸ்டெண்ட். அப்போது இருந்த பாஷையில் சொன்னால் ‘அடுத்தாள்’

1940ல் தமிழ்நாடு திரும்பி ஆறு மாதம் இருந்துவிட்டு, மறுபடியும் இந்தோனேசியா போனதும் பிறகு ஜப்பான் யுத்தம் ஆரம்பித்துவிட்டது.

யுத்த காலம் என்பதால் தொழிலை மாற்றிக் கொண்டு வியாபாரம் பண்ணினோம். இந்தோனேசியாவிலிருந்து சரக்குகளைக் கப்பலில் ஏற்றி மலேயாவுக்குப் போவோம்.

புகையிலை, டீ, காபி, கருவாப்பாட்டை போன்றவற்றை பாய்மரக் கப்பலில் ஏற்றிக் கொண்டு போவோம். ஐந்து நாட்கள் கப்பலில் பிராயணம் பண்ணனும். மலேயாவுக்குக் கொண்டு போய் பொருட்களை வித்துட்டு ஜவுளித்துணி வாங்கிட்டு! கப்பலிலேயே திரும்புவோம்.

ஒரு தடவை மலேயாவுக்குப் பாய்மரக்கப்பலில் (தொங்கான்) போகிறபோது புயல் வந்து விட்டது. கடல் அலை தூக்கி வாரிப் போடுகிறது. நல்ல மழை. கப்பலுக்குள் ஒரேடியாகத் தண்ணீர் ஒழுகுகிறது. காற்றடித்த திசைக்குக் கப்பல் திசைமாறிவிட்டது.

பலரும் தவிப்புடன் இருந்தோம். சீன மாலுமிகள் பிரயாசைப்பட்டு ஒழுங்குபடுத்திக்கொண்டு போனார்கள். எடை அதிகம் என்பதால் எங்களிடம் இருந்த கொஞ்சம் சரக்குகளைக்கூட கடலில் தூக்கிப் போட்டோம். இந்த அனுபவங்களையெல்லாம் ‘புயலில் ஒரு தோணி’ நாவலில் எழுதியிருக்கிறேன்.

அதன்பிறகு கொஞ்ச காலம் பினாங்கில் இருந்தேன். இரண்டு வருஷம் வரை பர்மாவில் யுத்தம் நடந்து கொண்டிருந்தது.

ஜப்பான் படைகள் பல இடங்களில் முன்னேறிக் கொண்டிருந்தன. விமான நிலையம் போன்ற குறிப்பிட்ட சில பகுதிகளில் குண்டுகள் விழுந்து கொண்டிருந்தன. இரவில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.

இருந்தும் அரிசி, தானியங்களுக்குப் பற்றாக்குறை இல்லை. யுத்தம் முதலில் பீதியை ஏற்படுத்தினாலும் பிறகு பழகிவிட்டது.

அந்தச் சமயத்தில் பினாங்கில் நேதாஜி கலந்து கொண்ட கூட்டம். ஏராளமான தமிழர்கள் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் போய்ச் சேர்ந்து கொண்டிருந்த நேரம். லேவா தேவி வியாபாரம் பண்ணிக் கொண்டிருந்தவர்களும் ராணுவத்தில் சேர்ந்து கொண்டிருந்தார்கள்.

பினாங்கில் உள்ள சீன விளையாட்டு மைதானம். அங்குதான் நேதாஜி பேசினார். நானும் போயிருந்தேன். தனித்துவமானது அவரது தோற்றம். மனசைக் கவரக்கூடிய கம்பீரம். அதற்கேற்றபடி எழுச்சியூட்டக்கூடிய பேச்சு.

தேசாஜி ஆங்கிலத்தில் பேச, புதுக்கோட்டைக்காரரான சுப்பிரமணியம் என்பவர்தான் அதைத் தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்தார். ஏறத்தாழ ஒன்றரை மணி நேரப் பேச்சு. இந்தியாவைப் பற்றி அவர் பேசின பேச்சுக்குக் கூட்டமே கட்டுப்பட்ட மாதிரி இருந்தது.

கேட்டுக் கொண்டிருந்த பெண்களில் பலர் கண் கலங்கினபடி தங்களது நகைகளைக் கூட உடனே சுழற்றிக் கொடுத்தார்கள். ஒவ்வொரு கூட்டத்திலும் நல்ல பணமும் சேர்ந்தது. கோலாலம்பூரில் நேதாஜி பேசும் போதெல்லாம் ஹிந்தியிலேயே பேசினார்.

சிறு பையன்களுக்குக்கூட அவரிடம் ஒரு ஈர்ப்பு இருந்தது. பாலர் சேனை என்று இவர்களை வைத்துத் தனிப் பிரிவே இருந்தது. அவர்கள் நாடகமெல்லாம் போடுவார்கள். பல இடங்களில் நேதாஜியின் படைக்கு முகாம்கள் இருந்தன.

பர்மா எல்லையில் பிரிட்டிஷார் படையை ஜப்பான்காரர்களுடன் இணைந்து எதிர்த்துப் போரிட்டது நேதாஜியின் படை. இதில் இறந்து போனவர்களில் பலர் தமிழர்கள். யுத்தம் முடிந்த பிறகு பினாங்குக்கு பலர் நடந்தே வந்து சேர்ந்தார்கள்.

பினாங்குக்கு வந்து தமிழர்களை வரவேற்க ஒரு கமிட்டியே போடப்பட்டது. அதன்பிறகு தமிழ் நாட்டுக்காரர்களில் அநேகம்பேர் தமிழகத்துக்கு வந்து விட்டார்கள். 1946 கடைசியில் நானும் தமிழகத்துக்கு வந்து விட்டேன்.

வந்து கொஞ்ச நாட்களில் மதுரைக்கு வந்து தினத்தத்தி அலுவலகத்தில் உதவி ஆசிரியராக 47ல் சேர்ந்தேன். 47லிருந்து 87 வரை உதவி ஆசிரியர்தான். இப்போது ‘ரிடையர்டு’ ஆயிட்டேன்.

வந்தபிறகுதான் யுத்தகால அனுபவத்தை வைத்து ‘கடலுக்கப்பால்’ நாவலை எழுதி கலைமகள் நாவல் போட்டிக்கு அனுப்பினேன். பரிசு கிடைத்தது. புத்தகமாகவும் வெளிவந்தது. பிறகு ‘புயலில் ஒரு தோணி’ நாவலை எழுதினேன்.

இந்த இரண்டு நாவல்களிலும் இருப்பவை எல்லாம் எனது சொந்த அனுபவங்கள்தான்.

“இந்த நாவல்கள் போதுமான அளவுக்கு கவனிக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறீர்களா?”

‘அப்படித் தெரியலை. சில பத்திரிகைகளில் எழுதினாங்க. இப்போது சிலரோட கவனத்துக்கு வந்துருக்கு.’ என்று சொல்கிற சிங்காரம் ஹெமிங்வே, டால்ஸ்டாய் போன்றவர்களின் எழுத்துக்களைச் சிலாகித்துச் சொல்கிறார்.

புதுமைப்பித்தனின் சிறுகதை ஒன்றை அப்போ ஒரு தீபாவளி மலர்லே படிச்சப்பவே தோணுச்சு. தமிழில் ஒரு அசகாயசூரன் இருக்கான்னு..’ என்று குதூகலத்துடன் சொன்னாலும், ‘தமிழ்நாட்டில் இலக்கியத்தைப் பொறுத்து இல்லாமல், எழுதுகிற ஆளின் தரத்தைப் பார்த்தே விமரிசனம், கவனிப்பு எல்லாமே நடக்குது.. நமக்கு வேண்டிய ஆள், வசதியான ஆள் என்பதை வைத்துக்கூட அவன் எழுத்தைக் கவனிக்கிறார்கள்’ என்கிறார் தளர்வான குரலில்.

சமீபத்தில் ரத்த அழுத்தம் கூடி ‘ஹார்ட் அட்டாக்’ வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பியிக்கிறார்.

யுத்த அனுபவம், நாற்பது வருஷத்தியப் பத்திரிகை அனுபவம், தனிமையான வாழ்க்கை இதெல்லாம் இருந்தும் தன்னைப் பார்க்க வருகிறவர்களிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும்படி பேசுகிறார், அவரது ‘கடலுக்கப்பால்’ நாவலின் இறுதியில் சொல்லியிருப்பது மாதிரியே.

‘மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதந்கு எதுவுமே இல்லை. மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பதில்லை.’

இந்தக் கட்டுரை ஒரு பிரபல வார இதழில் வெளியான சிலநாட்களில் தொலைபேசியில் என்னை அழைத்திருந்தார் சிங்காரம்.

மதுரை நியூசினிமா எதிரில் உள்ள ஓய்.எம்.சி.ஏ. விடுதியில் அவர் தங்கியிருந்த அறைக்குப் போனபோது மாலை நேரம். சந்தோஷத்துடன் வரவேற்றார். முகத்தில் தனிப்பூரிப்பு.

“இங்கே எத்தனையோ தங்கியிருக்கேன். என்னை வருசமா எழுத்தாளனான்னு ஒருத்தரும் கேட்டதில்லை. ஆனா இப்போ என்னைப் பத்தி குமுதத்தில் வெளிவந்து, போட்டாவும் போட்டுட்டீங்க.. பல பேரு ஒருவிதத்தில் விசாரிக்கிறாங்க. இது ஒரு விதத்தில் கூச்சமாவும் இருக்குப்பா.. எப்படியோ கடைசிக் காலத்தில் இது நடந்திருக்கு…”

நீண்ட நேரம் பல விஷயங்களைப் பற்றி ஏதோ ஒரு மடைதிறந்தாற்போல அபாரமான உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருந்தார்.

அந்தக் கால மதுரையைப் பற்றி காட்சிபூர்வமான விவரிக்கிற மாதிரி பேசிக்கொண்டிருந்த முகம் பரவசப்பட்டிருந்தது. மதுரையில் அப்போதிருந்த அபூர்வமான இயல்பு கொண்ட தேவதாசிகளைப் பற்றி ருசிகரமாகப் பேசினார்.

குறிப்பிட்ட தெரு ஒன்றில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் மேலிருக்கிற கச்சை முடிச்சைப் பிடித்தபடி தெருவில் போகிறவர்களை ஈர்ப்பது பற்றி பாவனையுடன் சொல்லிக் கொண்டிருந்தார். கோவில்களில் நடந்த சதிர்க் கச்சேரிகளைப் பார்த்த அனுபவங்களை லாவகத்துடன் விவரித்தார்.

அவரிடம் விடைபெறும்போது ‘என் கூட நீங்க ஒரு நாள் சாப்பிட வந்தா நல்லாயிருக்கும்..’ என்றவர் மதுரையில் அவர் தொடர்ந்து சாப்பிடும் சில ஹோட்டல்கள், மெஸ்களைப் பற்றிச் சொல்லும்போது அவரது ருசி பிரதிபலித்தது.

அந்த நேரத்தில் அவரிடம் இருந்த அலாதியான முகபாவம் ரசிக்கத் தக்கதாக இருந்தது. “இன்னொரு நாளைக்கு வாரேன்.. சாப்பிடப் போகலாம்.. இன்னைக்குக் கிளம்புறேன்..” என்றதும் “சரி.. கிளம்புங்க.. கண்டிப்பா இன்னொரு நாள் சாப்பிடற நேரத்துக்கு வரணும்..” என்றார் பரிவு ததும்பிய படி.

அதற்குப் பிறகு சில நாட்களுக்குள் நண்பர் மூலம் சிங்காரம் மதுரை பேருந்து நிலையத்திலிருந்து சற்றுத் தொலைவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சீரியஸான நிலையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. போனேன்.

தன்னை மறந்த நிலையில் செயற்கைச் சுவாசத்துடன் படுத்திருந்தார். முகத்தில் மெல்லிய தாடி படர்ந்திருந்தது. விளிம்பு நிலையில் இருந்ததை உணர முடிந்தது. நர்ஸ்கள் மட்டுமே கவனித்துக் கொண்டிருந்தார்கள். உடன் யாருமில்லை.

அவருடைய சேமிப்பாக இருந்த சில லட்ச ரூபாயை அவர் சார்ந்த ஒரு சமூகச் சங்கத்திற்கு வழங்கி விட்டதாகச் சொன்னார்கள்.

இரு நாட்களில் அவருடைய உயிர் பிரிந்த செய்தி வந்துவிட்டது. அந்திமக் காலத்திலும் தனிமையை மட்டுமே தோழமையாகக் கொண்டிருந்த அவருடைய மரணத்திலும் அதே தனிமையின் அடர்த்தி!.

Leave a Reply

Your email address will not be published.