போதைப் பொருளும் இளம் சமூகமும்

மனிதனின் சுய நிலையை சீர்குலைத்து புத்தியை மங்க வைத்து நல்வாழ்வுக்கு பங்கம் விளைவிக்கும் விடயங்களுள் போதைப்பொருள் முதன்மை பெறுகின்றது . சுயாதீனமான உடல் , உள ஆரோக்கியமுள்ள மனிதனின் சாதாரண நிலையை மாற்றி அசாதாரண தன்மைகளான தீமைகள் , கொடுமைகள் , வன்முறைகள் போன்றவற்றை தனக்கும் தான் சார்ந்திருக்கும் சமூகத்திற்கும் விளைவிப்பதற்குத் தூண்டு கோலாக அமைகின்ற ஒரு விஷக் கிருமியே போதையாகும் . சாதாரண வீட்டு மட்டத்தில் ஆரம்பித்து சர்வதேசம் வரை அதன் தாக்கம் பாரிய அளவில் பேசப்படும் நிலை உருவாகியுள்ளது.

இன்று எமது நாட்டிலே உலாவித் திரிந்து இளம் சமுதாயத்தினை சீர்குலைத்துக் கொண்டு வரும் போதைப் பொருட்களிலே மதுபாவனை முதன்மை இடத்தை பெற்றிருப்பதோடு அதற்கு அடுத்த நிலையில் கஞ்சா , ஹெரோயின், புகையிலை , அபின் என்பனவும் காணப்படுகின்றன. இன்றைக்கு இளம் சமுதாயம் இந்த போதைப்பொருள் பாவனைக்கு அதிகளவில் அடிமையாகி இருப்பதை காணக் கூடியதாக உள்ளது . போதைப்பொருள் பாவனையானது ஒருவரை அதற்கு அடிமையாக்கி விடும். அவரது வருமானம் முழுவதையும் இதற்கெனவே செலவிட்டு அவர்களது உடலையும் கெடுத்துக் கொள்ளும் . அது மட்டுமன்று பல குடும்பங்களில் பிரச்சினைகள் தோன்றவும் நாட்டில் களவு , கொலை , விபத்து , கொள்ளை , பெண்கள் மீதான வன்முறை , சிறுவர் துஷ்பிரயோகம் போன்றவற்றை ஊக்குவிப்பதற்கு முதன்மையான காரணியாக விளங்குவது போதைப்பொருள் ஆகும் . மற்றும் உடல் பருமன், ஈரல் , குடல் , சிறுநீரகம் , இதயம் போன்ற உறுப்புக்கள் பாதிக்கப்பட்டு விரைவில் நோயாளியாகி விரைவில் இறக்கும் நிலை ஏற்படுகின்றது .

நாட்டினுடைய வருங்காலத்தை தீர்மானிக்க வேண்டிய இளம் சமுதாயத்தினர் கல்வி கற்று நல்ல சமுதாய பிரஜைகளாக மாற வேண்டும் என்பதுவே ஒவ்வொரு பெற்றோர்களினுடைய கனவாகும். அதற்காக அவர்கள் மிகுந்த சிரமப்பட்டு பல தியாகங்களை செய்து தமது பிள்ளைகளை வளர்த்து கல்வி கற்க அனுப்புவார்கள் . ஆனால் இன்றைய காலத்து இளைஞர்கள் சிறுவயதிலேயே சில சமூக விரோதிகளான மதுபாவனையில் ஈடுபடும் நண்பர்களோடு சேர்ந்து போதைப் பழக்கத்திற்கு சிறிது சிறிதாக ஆரம்பித்து போதை இல்லாமல் வாழவே முடியாது என்ற நிலைக்கு அவர்களை கொண்டுபோய் நிறுத்தும் பெருமைக்குரியது . இப் போதைப் பாவனை இதனால் ஏதுமறியாத சிறுவர்கள் கூட தமது எதிர்காலத்தை இழந்து நிற்கும் நிலையானது மிகவும் வேதனைக்குரியது . போதைக்கு அடிமையானவர்கள் இயல்பாகவே சமூகத்தால் வெறுக்கப்பட்டு இயல்பாகவே சந்தோஷங்களை இழந்து இயற்கையான அழகை இழந்து அருவருக்கத் தக்க மனிதர்களாக போதைப்பாவனை மாற்றி விடுகிறது.

போதைப்பாவனையால் எமது இளம் சமூகம் சீரழிவது மறுக்க முடியாத உண்மை ஆகவே எம்மையும் எமது உறவினர்களையும் நமது வருங்கால சமூகத்தையும் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரதும் கடமையாகும் . சட்டமுறைகளை இறுக்கமாக்கி தவறு செய்யும் அதிகாரிகளை தண்டிப்பதுடன் போதைப்பொருட்களை விற்போர்களை கைது செய்து சிறையில் அடைப்பதனால் இச் செயல்கள் குறைய வாய்ப்பிருக்கிறது. ஆகவே *” மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு , மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு “* என்பதற்கு இணங்க அனைவரும் ஒன்றிணைந்து போதையற்ற இளம் சமுதாயத்தை உருவாக்குவோம்

Leave a Reply

Your email address will not be published.