இன்றைய உலகின் இரசாயனங்களின் பயன்பாடு

இன்றைய உலகின் இரசாயனங்களின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது.மனிதனின் அன்றாட தேவைகளான சுகாதாரத்தைப் பேணுதல், பயிர்களைப் பாதுகாத்தல், களைகளை கட்டுப்படுத்துதல், நோய்க்காவிகளை கட்டுப்படுத்தல் என்பதற்காக கட்டாயம் இரசாயனப் பாவனைகளிலேயே தங்கியிருக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆனால் இதனை துஷ்பிரயோகம் செய்யும் போது மனிதனுக்கு உதவிய இதே இரசாயனங்கள் சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்துவதுடன் சூழலுக்கும் அதிக கேட்டினையும் ஏற்படுத்தி சில சமயங்களில் நீண்டகாலம் மீள்அமைக்க முடியாத பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.

இது தொடர்பாக சமீப காலங்களில் அதிக அவதானம் ஏற்பட இன்னுமொரு காரணம் இன்று தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்தும் இரசாயனங்களின் 80% சதவீதமானவை அதன் நீண்டகால பாதிப்புகள் பற்றி போதுமான ஆய்வுக்கு உட்படுத்தப்படாதவை. அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியகத்தின் தகவல் படி சுமார் 80 ஆயிரம் வகையான ரசாயனங்கள் பயன்பாட்டில் உள்ளதாக நிரற்படுத்தபட்டுள்ளது. இவற்றில் 3000 வகையான ரசாயனங்கள் பெருமளவில் சர்வதேசரீதியில் உற்பத்தி செய்யப்பட்டு வணிகமும் செய்யப்படுகின்றது. ஆனால் இவை அனைத்தும் கூட முறையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவை அல்ல.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது முதுமொழி, இரசாயனங்களும் அப்படித்தான் ஒரு பிரபல்யமான விஞ்ஞான கூற்று, எல்லா இரசாயணங்களும் நஞ்சுகள் தான் ஆனால் அதன் அளவுதான் அது மருந்தாகப் பயன்படுகிறதா, விஷமாக பயன்படுகிறதா என்பதை தீர்மானிக்கின்றது என்கிறது. இன்றைய ரஸ்யா உக்ரைன் பிரச்சினையில் கூட இரசாயனங்கள் ஆயுதங்களாக பயன்படுத்தப்பட்டு விடுமோ என்னும் அச்சம் இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இரசாயன பயன்பாட்டில் ஏற்படும் பிரதான பிரச்சனைகளாவன , முறைதவறிய பாவனை, அளவுக்கு அதிகமாக பயன்படுத்துதல்,அல்லது தேவையான அளவை விட குறைவாக தொடர்ச்சியாக பயன்படுத்துதல், பிழையான வழிகளில் சேகரித்து வைத்தல், எடுத்துச் செல்லும்போது கைக்கொள்ளப்படும் தவறுகள்,அந்த முறைகள் காரணமாக சூழலில் கலத்தல், பாவித்த பின்னர் கழிவகற்றம் செய்யும் போது ஏற்படும் தவறுகள்,விபத்துகள் காரணமாக ரசாயன கூடங்களில் இருந்து ரசாயனங்கள் வெளியேறல், மற்றும் ரசாயன ஆயுத உற்பத்தி போன்றவையாகும்.

இனி இரசாயனங்களால் ஏற்படும் பிரதான சுகாதாரப் பிரச்சினைகள் என்ன என்பதனை பார்ப்போம் இலங்கையை பொறுத்தவரை 60 வீதமான தற்கொலைகள் ரசாயனங்களை பயன்படுத்தியே இடம்பெறுகின்றன. பூச்சிக்கொல்லிகள், சிலவகை மருந்துகள், சில இயற்கை பொருட்கள் என்பன இவற்றில் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் அதிக உயிராபத்தினை ஏற்படுத்தும் ரசாயன பாவனைகளை தற்கொலை தடுப்பினை நோக்காகக் கொண்டு ஒரு சில தசாப்தங்களுக்கு முன்னர் மட்டுப்படுத்தப்பட்டது, இதனால் தற்கொலை இழப்புகளும் பெருமளவில் குறைந்திருந்தன.

பின்வரும் இரசாயன பொருட்கள் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்துவது அறியப்பட்டுள்ளது. இவற்றுள் பிரதானமானது பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்திகளில் காணப்படும் பென்சீன் எனப்படும் இரசாயனப்பொருள். இது குருதிப் புற்று நோயை ஏற்படுத்தும் காரணியாக இனங்காணப்பட்டுள்ளது.அதேபோல் எதிலீன் ஒக்சைட், சிலிக்கா, ஆஸ்பெஸ்டஸ் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இந்த ரசாயனங்கள் ஏற்படும் பிரதான பாதிப்புகளாவன புற்று நோய், சுவாச நோய்கள், ஈரல்,சிறுநீரகம் போன்றவைகள் ஏற்படும் பாதிப்புகள் என்பவற்றைக் குறிப்பிடலாம்.அறிக்கை ஒன்றின்படி எட்டு சதவீதமான புற்று நோய்களுக்கு இரசாயனங்கள் நேரடி காரணமாகின்றன. அதேபோல் 20 சதவீதமான சுவாச புற்று நோய்களுக்கும் காரணமாகும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பீடைநாசினிகளின் அளவுக்கதிகமான பயன்பாடு தற்போது பல்வேறு சந்தர்ப்பங்களில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவது அறியப்பட்டுள்ளது. இது உடனடி பாதிப்புகளாக தோல் நோய்கள், சுவாச நோய்கள்,காய்ச்சல் போன்றவற்றை ஏற்படுத்துவதுடன் நீண்டகால நோக்கில் ஆஸ்துமா, புற்றுநோய்,நரம்பு நோய்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு, மற்றும் நீண்டகால தோல் சம்பந்தமான நோய் போன்றவற்றையும் ஏற்படுத்தலாம்.அதிக விவசாய இரசாயனப் பாவனை இடம்பெறும் பகுதிகளில் அதிகம் சிறுநீரக நோய்கள் ஏற்படுவதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அடுத்த மிக முக்கியமான ஒன்று இலத்திரனியல் கழிவுகள்,சரியான முறையில் கழிவு முகாமைத்துவம் செய்யப்படாமல் ஏற்படும் பாதிப்புகள், அங்கங்கு வீசப்படும் மின்கலங்கள், பழுதான மின் சாதனங்களில் இருந்து வெளிவரும் இரசாயனங்கள் போன்றவையும்,பாதரசம், ஆர்சனிக்,ஈயம்,பிவிசி,கட்மியம் போன்ற நஞ்சுகள், மண், நீர்,காற்று என்பனவற்றில் கலந்து இன்று உள்ள மனிதர்களை மட்டுமன்றி தொப்புள் கொடியோடு பயணித்து பிறக்கும் குழந்தைகளிழும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இந்த பாதிப்புகள் பார்வைக்குறைவு, மூளை வளர்ச்சி குறைவு, சிறுநீரக பாதிப்பு, குருதிச்சோகை, மலட்டுத்தன்மை, புற்றுநோய்கள் என நீண்டுகொண்டே செல்லும்.

சரி இனி இதற்கு என்ன தீர்வு என பார்ப்போம். முதலாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு மிகுந்த பொறுப்புணர்வுடன் செயற்பட்டு தரக்கட்டுப்பாடுகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். சரியான சட்டங்கள் இயற்றப்பட்டு தேவையான ரசாயனங்கள் மட்டுமே இறக்குமதி அல்லது உற்பத்தி செய்யப்படுவதை உறுதிபடுத்த வேண்டும். அதே போல தேவையான இரசாயனங்கள்,தேவையான அளவில் மட்டும் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல மக்களும் பொறுப்புணர்வுடன் ரசாயனங்களைப் பயன்படுத்தி வீணான பாதிப்புகளை குறைத்து நமக்கு மட்டுமல்ல எதிர்கால சந்ததிக்கும் ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்துக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published.